×

இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை; குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசிக்கொடை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடக்கும். மாசிக்கொடையின் போது கேரள மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் மண்டைக்காடு வந்து கொடை விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டின் மாசிக்கொடை விழா கடந்த 27ம் தேதி காலை 8 மணியளவில் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொடை விழா நடந்து வருகிறது. கொடையின் முக்கிய வழிபாடான வலியபடுக்கை பூஜை கடந்த 4 ம் தேதி நள்ளிரவு நடந்தது. நேற்று இரவு 9.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேளத்துடன் பெரிய சக்கர தீவெட்டி பவனி நடந்தது. பவனியை நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) 10ம் நாள் கொடையும், நள்ளிரவு ஒடுக்கு பூஜையும் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, 6 மணிமுதல் குத்தியோட்டம், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 8 மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது. கோயில் மாசிக்கொடைவின் 10 ம்நாளை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். பலர் அருகில் உள்ள தோப்புக்களிலும் உறவினர்கள், நண்பர்கள் என்று கூட்டம் கூட்டமாய் அமர்ந்து பொங்கலிட்டனர். இதனால் கோயில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி, பஸ் நிறுத்தம், அம்மன் பவனி செல்லும் வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுகாப்பிற்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மண்டைக்காட்டில் பாதுகாப்பிற்கு 2 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பதார்த்தங்கள் சாஸ்தான் கோயிலிருந்து திருக்கோயிலுக்கு கொண்டு வருதல் நடக்கிறது. கோயில் பூசாரிகள் உணவு பதார்த்தங்களை வெள்ளை துணியால் மூடி தலையில் சுமந்து அம்மன் சன்னதிக்கு கொண்டு வருவர். அப்போது பக்தர்கள் கோயில் முன்பு உள்ள வீதிகளில் நிசப்தமாக அமர்ந்து ஒடுக்கு பவனியை தரிசிப்பர். தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் திருக்கோயில் கொடி இறக்கப்பட்டு கொடை நிறைவடைகிறது. …

The post இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை; குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Okuku Puja ,Kumari Mandaikkadu Bhagwati Amman Temple ,Nagercoil ,Mandaikkadu Bhagavatiyamman temple ,Kanyakumari district ,Kerala ,Oduku ,Puja ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...